மதுரை தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா நிதி அமைச்சர் பங்கேற்பு

Published Date: April 25, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் மென்பொருள் நிறுவனக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள வடபழஞ்சியில் அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டியோ மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ரூ. 500 கோடி முதலீட்டில் அமைகிறது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் தமிழக அரசிடம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான புதிய அலுவலகக் கட்டிடம் எல்காட் அலுவலக வளாகத்தில் அமைக்கப்படுகிறது.

இதன் பூமி பூஜையை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.

5 ஆயிரம் பேருக்கு வேலை:

அப்போது நிதி அமைச்சர் கூறும்போது, 'இங்கு அமையும் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதன் மூலம் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை மேம்பாடு அடையும். தமிழகத்தில் தொழில் செய்ய வரும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் அளிக்கும்' என்று குறிப்பிட்டார்.

Media: Hindu Tamil